twitter
rss












இரு கைகள் மற்றும் ஒரு காலையும் இழந்த மாணவர் ஜனார்த்தனன், தன்னம்பிக்கையோடு
படித்து பேனாவை வாயில் பிடித்து 10ம் வகுப்பு மெட்ரிக் தேர்வை, நேற்று இயல்பாக எழுதினார். எதிர்காலத்தில் தலைச்சிறந்த கிராபிக் டிசைனராக வருவேன் என்றும் கூறினார்.

சென்னை திருவொற்றியூர் ரெடிமர் மெட்ரிக் பள்ளியின் 10ம் வகுப்பு மாணவன் ஜனார்த்தனன். இவர் எட்டு வயதில் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். இரும்புக் கம்பியை வைத்து சுழற்றி விளையாடியபோது உயர்மட்ட மின்கேபிளில் பட்டதால் விபத்து ஏற்பட்டது. இதில் ஜனார்த்தனின் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டன, ஒரு காலையும் இழந்தார்.

பின்னர், தன்னம்பிக்கையோடு பேனாவை வாயில் பிடித்து எழுதிப் பழகிய ஜனார்த்தனன், கைகள் நன்கு செயல்படும் பிற மாணவர்களைப் போலவே வேகமாக எழுதும் திறனை வளர்த்துக் கொண்டார்.

அரசு மெட்ரிக் பொதுத் தேர்வுகள் நேற்று துவங்கின. இதில், ராயபுரத்தில் உள்ள நார்த் விக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜனார்த்தனன், தமிழ் முதல் தாள் தேர்வு எழுதினார்.

உடல் திறன் பாதிக்கப்பட்டோர் தேர்வு எழுத ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என அரசு விதிமுறை உள்ளது. ஆனால், துறை ரீதியான கடிதம் இல்லை எனக் கூறி தேர்வு நடந்த பள்ளியில் ஜனார்த்தனத்திற்கு கூடுதல் நேரம் தர மறுத்துவிட்டனர்.

இதையடுத்து நிருபர்கள் அடுத்தடுத்து கல்வித்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு சிறுவனின் நிலையை விளக்கினர்.இதைத் தொடர்ந்து சென்னை கிழக்கு மாவட்ட கல்வி அதிகாரி திருஞானசம்பந்தம் பள்ளிக்கு "விசிட்' அடித்தார்.

மாணவர் ஜனார்த்தனன் கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத அனுமதி வழங்கினார். ஆனாலும், ஜனார்த்தனன் இதை அவ்வளவாக விரும்பவில்லை என்பதுதான் "ஹைலைட்'.

தேர்வு நேரம் துவங்கியதும் பேனாவை வாயில் பிடித்து எல்லோரையும் போலவே இயல்பாகவும், உரிய வேகத்திலும் ஜனார்த்தனன் தேர்வு எழுதினார். முன்னதாக, ஜனார்த்தனன் நிருபர்களிடம் கூறுகையில், "நான் எட்டு வயதில் இருக்கும்போது மின்சாரம் தாக்கியதில் இரு கைகளும், ஒரு காலும் துண்டிக்கப்பட்டன.

இதனால் எதிர்காலம் என்னாகுமோ என்று பயந்த சமயத்தில்தான் வாயினால் எழுத முயற்சி செய் என டாக்டர் கூறினார். இதை சவாலாக எடுத்துக் கொண்டு எழுதவும், ஓவியம் வரையவும் பழகினேன்.

தற்போது இயல்பாகவே எல்லாரையும் போல் உரிய வேகத்தில் எழுதுகிறேன். ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், எதிர்காலத்தில் கிராபிக் டிசைனராக வருவேன்,' என்றார் தன்னம்பிக்கையுடன்.

இதுவரை, பேனாவை வாயில் பிடித்து ஓவியம் வரைந்து மாநில மற்றும் மாவட்ட அளவில் 80க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ளார்.

2004ம் ஆண்டு சிறந்த படைப்புத்திறனுக்காக குழந்தைகள் விருது மற்றும் பால்ஸ்ரி விருதையும் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் இருந்து பெற்றுள்ளார்.

கம்ப்யூட்டர்களை இயக்கவும், கீபோர்டு வாசிக்கவும் ஜனார்த்தனன் பயிற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments: