நவநீதம் பிள்ளை, தென் ஆப்பிரிக்காவின் டர்பனில்
ஒரு வறிய தமிழ்க் குடும்பத்தில் பிறந்த, இந்தியக் குடிவழித் தமிழர்.
அவரது தந்தை, பேருந்து ஓட்டுநராக இருந்தவர். வறுமையில் வாடினாலும்,
அறிவுத் திறன் நவநீதம் பிள்ளையின் செல்வமாயிருந்தது. உள்ளூர்
இந்தியர்களின் உதவியுடனேயே சட்டம் படித்த அவர்,
1982 ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பில் டாக்டர் பட்டம் பெற்ற
வெள்ளையரல்லாத முதல் தென்னாப்பிரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார். 1988 முனைவர் பட்டமும் மெற்றார்.பிள்ளையின் கணவரும் ஒரு வழக்கறிஞர், நிறவெறி வெள்ளை அரசுக்குஎதிராக மண்டேலா நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர். கணவர் உள்பட நிறவெறிக்கு எதிராகப் போராடிய போராளிகளுக்கு தக்க சமயத்தில் தேவையான சட்டப் பாதுகாப்பைப் பெற்றுத் தந்தவர் நவநீதம் பிள்ளை.
1973ல், ரொபன் தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த மண்டேலா உள்ளிட்ட
அரசியல் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திக்க சட்டப்படியான உரிமையை
வாதாடிப் பெற்றவர் நவநீதம் பிள்ளை. நிறவெறியிலிருந்து விடுபட்ட பிறகு,
1995ல் தென் ஆப்பிரிக்க உயர்நீதி மன்றத்தில் பிள்ளை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் இந்தியக் குடிவழித் தமிழர் அவர்தான்.முன்னதாக, 1967ல் நேட்டால் மாகாணத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்க நவநீதம் பிள்ளை முயன்றபோது, எந்த சட்ட ஆலோசனை நிறுவனமும் அவரைச் சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை. வழக்கறிஞர்களின் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், வெள்ளையரல்லாத ஒரு வழக்கறிஞரின் கீழ் வேலை செய்ய விரும்பமாட்டார்கள் என்பதே அதற்குக் காரணம். வேறு வழியில்லாமல் தனியாக வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார் பிள்ளை. அப்படி தனக்கென்று ஒரு அலுவலகம் ஏற்படுத்திக் கொண்ட முதல் பெண் வழக்கறிஞர் இவர்தான்.
வெள்ளையரல்லாத வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் அறைக்குச் சென்று
அவர்களைச் சந்திக்க முடியாத நிலை அப்போது இருந்தது. 'நீதிபதியின்
அறைக்குள் ஒரு நீதிபதியாகவே தான் நான் நுழைய வேண்டியிருந்தது'
என்றார் நவநீதம் பிள்ளை, 1995ல் நீதிபதியாக நியமிக்கப் பட்ட பின்,
நகைச்சுவை உணர்வுடன்!
2008ல், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக நவநீதம்
பிள்ளையை நியமிக்க பான் கீ மூன் முடிவெடுத்தபோது,
அமெரிக்கா அதைக் கடுமையாக எதிர்த்தது. என்றாலும், அனைத்துத்
தகுதிகளின் அடிப்படையிலும் ஏகமனதாக அவர் நியமிக்கப்பட்டார். 2
012ல் மீண்டும் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட பிள்ளை 2014 வரை,
அந்தப் பொறுப்பில் இருப்பார்.